உலகில் ஒவ்வொருவரும் அவரவருக்கு அவசியமானத் தேவைகளை சொல்லி இறைவனிடம் கேட்கிறோம்.
தற்போது என்ன தேவைப் படுகிறது ? நாளை என்னத் தேவைப்படும் ? என்பதை சிறிதளவு நம்முடைய புலனுக்கு எட்டுகின்ற வரையில்; மட்டுமே கேட்போம்.
இதைவிடவும் ஒவ்வொருவருடைய தற்போதையத் தேவை என்ன ? எதிர்காலத் தேவை என்ன ? என்பதுடன் மேலதிகமாக மரணித்தப் பின் குடியேறுகின்ற வீட்டின் (கப்ரின்) நிலை என்ன ? நிரந்தரமான மறுமையின் ( சொர்க்கமா, நரகமா என்ற ) நிலை என்ன ? என்பவற்றை துல்லியமாக அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மேற்காணும் மூன்று கட்டங்களில் சிறந்தவைகளை அடைந்து கொள்வதற்காக தொழுகையின் ஊடே வலிமையான துஆக்களை கேட்க வைத்து நிறைவேற்றிக் கொடுக்கிறான்.
தொழுகையின் முதல் நிலையில் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுகிறோம்.
1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.
2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
3. தீர்ப்பு நாளின் அதிபதி.
4. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
5. எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!
6. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி.
7. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.
மேற்காணும் திருமறைக்குர்ஆனின் வசனங்களை ஒருவர் தொழுகை;கு வெளியில் ஓதினால் எழுத்துக்குப் பத்து நன்மைகள் இதையே அவர் தொழுகையில் ஓதினால் அவரது தலை எழுத்தையே மாற்றும் வலிமை வாய்ந்த துஆவாக மாறிவிடுகிறது,வழிகேட்டிலிருந்து நேர்வழிக்கு திருப்பி விடும் சக்தி வாய்ந்த துஆவாக மாறிவிடுகிறது.